எங்க ஊர் சலூன்கள்

எங்கள் ஊரில் ஒன்றிரண்டு சலூன்கள் (முடி திருத்தும் நிலையங்கள்) இருந்தன. அவை பெரும்பாலும் கூரை வேயப்பட்ட, மங்கல் வெளிச்சமுள்ள கடைகளாக இருந்தன , 



கடையின் முக்கியமான பாகம் அந்த இரண்டு நாற்காலிகள்.  இப்போது நகரங்களில் சுழல்  நாற்காலிகளை பார்க்கிறேன்.  இதை சாய்க்கலாம், சரிக்கலாம், சுழற்றலாம். ஆனால் நான் அதை சிறு வயதில் கண்டதில்லை.  எங்கள் ஊர் சலூனில் இருந்த நாற்காலிகளின் ஒரே விசேஷ அம்சம் ஒரு விசித்திரமான கவை. முடி திருத்துபவர் அதை நாற்காலியில் செருகி விட்டு வாடிக்கையாளர் தலையை சாய்த்து ஷவரம் செய்ய வசதியாக இருந்தது.  முடி திருத்துபவர் ஆரம்பிக்கும் முன் ஒரு துணியைப் போர்த்தி விடுவார். முடித் துகள்கள் சட்டையில் ஒட்டிக் கொள்ளாமலிருக்க இது பயன்படும். ஆனால், அந்தத் துணி நீரையும் சோப்பையும் கண்டு வெகு காலம் ஆகி இருக்கும். 


முடிக் கலைஞரின் மகத்தான ஆயுதம் 'மெஷின்'. இது சரசரவென முடியை வெட்டித் தள்ளக்கூடியது. இந்தக் காலத்தில் உள்ள electric trimmer (எலக்ட்ரிக் ட்ரிம்மர்) இன் தந்தை இது.  சிறு வயதில் எனக்கு இதைக் கண்டால் நடுக்கம். இது சதையையும் கிள்ளி எடுத்து விடும் என்ற பயம் இருந்தது. முடி வெட்டிய பின், முடி திருத்துபவர் அந்த மெஷினைப் பிரித்து துடைத்து தேங்காய் எண்ணெய் விட்டு திரும்ப பொருத்தி விடுவார். 
         
சிறுவர்களுக்கு கத்தியை அதிகம் உபயோகிக்க மாட்டார். இப்போது உள்ள கத்திகளில் பிளேடை எடுத்து வேறு பிளேடை பொருத்த முடியும்.  அந்தக் காலத்தில் இவ்வசதி இல்லை. கத்தி மழுங்கினால் முடி திருத்துபவர் அதை ஒரு தோல் பட்டையில் தேய்த்து கூர்ப்பாக்குவார். இதை இப்போது நீங்கள் பார்க்க முடியாது.
இது போல, சிறுவர்களுக்கு பயன்படாத இன்னொரு ஆயுதம் ஷவரக் கருவிகள்.  அந்தக் காலத்தில் ஷேவிங் க்ரீம் கிடையாது. ஷேவிங் சோப் கேக் தான். முடி திருத்துபவர் பிரஷ்ஷை நீரில் நனைத்து சோப் கேக் மேல் தேய்த்து நுரையை வரவழைப்பார் .    

சில பொருட்களை சலூனில் மட்டுமே பார்த்திக்கிறேன். உதாரணமாக, V John ஷேவிங் கிரீம்,  Charming talcum பவுடர் முதலான சாதனங்களை நான் கடைகளில் பார்த்ததில்லை.  

அந்தக் காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லை. Facebook, WhatsApp  போன்ற appகள் இல்லை. 


முடி திருத்தும் நிலையங்களில் ஒரு மர பெஞ்சு இருக்கும்,  சில நாளிதழ்கள் இருக்கும். முடி திருத்திக் கொள்வதற்காக காத்திருப்பவர்கள் நாளிதழ்களில் உள்ள முக்கியமான செய்திகளை கார சாரமாக அலசுவார்கள். உள்நாட்டு ,  வெளிநாட்டு விவகாரங்களை அக்கு வேறாக ஆணி வேறாக அலசி ஆய்வார்கள்.

இது நடக்கையில் முடி திருத்துபவர் ஒரக் கண்ணால் கவனித்துக்கொண்டே இருப்பார். சண்டை வலுக்கும் போல இருந்தால் அவர் குறுக்கிட்டு விலக்கி வைப்பார். அவர் மேல் பயம் இல்லாவிட்டாலும் அவர் கையில் உள்ள கத்தி மேல் எல்லோருக்கும் மரியாதை இருக்கும் .         


எண்பதுகளில் நடிகர் கமல் ஹாசன் ஒரு ஹேர் ஸ்டைலை அறிமுகம் செய்தார். அதனை ஸ்டெப் கட்டிங் என்று அழைப்பர்.  அதைப் பார்த்த ஒவ்வொரு பையனும் தானும் கமல் போல இருக்க எண்ணி ஸ்டெப் கட்டிங் செய்து கொண்டான். வழக்கமான 'சாதா' கட்டிங்கை விட ஸ்டெப் கட்டிங் விலை அதிகம்.  ஆனால், அன்றும் இன்றும், நான் முடி திருத்துவரிடம் சொல்லும் ஒரே வார்த்தை 'மீடியம்' தான். 'சாதா'வுக்கு இன்னொரு பெயர் தான் 'மீடியம்'.

இப்போதெல்லாம் நான் என் வீட்டிற்கு அருகிலுள்ள சலூனுக்கு போகும் பொது, எனக்கு பலத்த மரியாதை கிடைக்கின்றது. என் பஞ்சு போல வெளுத்த முடிதான் அதற்கு காரணம். என் முடியை திருத்துவதை விட என் முடியின் நிறத்தை திருத்துவதுதான் சலூன்காரருக்கு லாபகரமானது போல் தோன்றுகிறது.

கிரிதரன் S 
23-Jan-2025




Comments